Nanbanin Thigil

Nanbanin Thigil
Click Here Poster Direct to Link Go Youtube

திங்கள், 6 ஜூன், 2016

முயல் வளர்ப்பு சுயதொழில்

முயல் வளர்ப்பு சுயதொழில்

இறைச்சிக்காகவும், தோல் மற்றும் உரோமத்திற்காகவும் முயல்களை வளர்ப்பது உலகின் பல்வேறு நாடுகளில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. நமது நாட்டிலும், முயல் வளர்ப்பதற்கான சாத்தியமான அம்சங்கள் நிறைய உள்ளன. மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப இறைச்சி உற்பத்தியை பெருக்கிட முயல் வளர்ப்பு மிகவும் ஏற்ற பண்ணைத் தொழிலாகும். முயல் கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வளர்க்கலாம். இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தும் ஏன் பலரும் முயல் வளர்க்க முன்வருவதில்லை என்பதை ஆராய்ந்தால் கீழ்க்கண்ட காரணங்கள் தெரிகின்றன.
· முயல்களை வீட்டில் வளர்க்கக் கூடாது என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது.
· முயல் வளர்த்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும் என்ற தவறான கருத்து.
· முயலினை இறைச்சிக்காக வெட்ட அஞ்சுவது / பரிதாபப்படுவது.
· முயல் பண்ணைத் தொடங்கிட போதுமான உதவிகள் கிட்டாமை.
· விற்பனை வசதிகள் திறம்பட இல்லாத நிலை.
· மானியத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலை.
மேற்கூறிய காரணங்கள் களையப்பட்டால் சிறப்பம்சங்கள் நிறைந்த முயல் வளர்ப்பு வெகு விரைவாக பிரபலம் அடையும்.
முயல் இனங்கள் மற்றும் சாதகமான சூழ்நிலை :
ஐம்பதிற்கும் மேற்பட்ட முயல் இனங்கள் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்லக்கூடிய இனங்கள் வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், நியூசீலாந்து வெள்ளை மற்றும் அங்கோரா இனங்கள். இவற்றில் அங்கோரா இன முயல்களை உயர்தர உரோமத்திற்காக குளிர்ந்த மற்றும் மலைப் பிரதேசங்களில் வளர்க்கலாம்.
இறைச்சி முயல்களை மலைப் பிரதேசங்களிலும், சமவெளிப் பகுதிகளிலும் வளர்க்கலாம். தட்பவெப்பநிலை 36 ஊ வரைக்கும் இருக்கலாம். ஈரப்பதம் காற்றில் 70 சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது. அங்கோரா இன முயல்களை வெப்பம் குறைந்த (15-20 C) மலைப் பிரதேசங்களில் மட்டும் வளர்க்கச் சிறந்தது.


முயல் இருப்பிடம் மற்றும் வளர்ப்பு :
முயல்களை கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. (ஆழ்கூள முறையிலும் வளர்க்கலாம்). மூலதனம் குறைவான மரக்கூண்டுகளிலும் வளர்க்கலாம். வளர்ந்த ஆண் முயலுக்கு (1.5 x 1.5 x 1.5′) அளவுள்ள கூண்டும், பெண் முயலுக்கு (2.0 x 2.5 x 3.0′) அளவுள்ள கூண்டும் ஏற்றது. இதில் தீவனம் மற்றும் தண்ணீர் கொடுப்பதற்கு சிறிய பாத்திரம் அல்லது கொள்கலன்களை கட்டிவிட வேண்டும். கூண்டுகளை தினந்தோறும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தீ உமிழி கொண்டு சுத்தம் செய்யலாம். முயல் சாணம் கூண்டுகளில் தங்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
முயல் மிகவும் சாதுவான பிராணியாதலால், பள்ளி சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் வளர்க்க ஏதுவானது. முயல் வளர்க்க ஆரம்பிப்போர் முதலில் ஓர் ஆண் மற்றும் மூன்று பெண் முயல்கள் கொண்ட சிறு குழுவாக ஆரம்பிக்கலாம். முயல் வளர்ப்பில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்த பின்னரே அதிக அளவில் முயல் வளர்க்க எண்ண வேண்டும். கொல்லைப் புறத்தில் வளர்க்க 1 ஆண் மற்றும் 3 பெண் முயல்கள் போதும். இதிலிருநது வாரந்தோறும் ஒரு கிலோ இறைச்சி கிடைக்கும். இது குடும்ப தேவைக்கு போதுமானது. கொல்லைப் புறத்தில் முயல் வளர்க்கும் சமையலறைக் கழிவுகள் மற்றும் பசுந்தீவனம் கொண்டே பராமரிக்கலாம்.
முயல் வளர்ப்பின் சிறப்பம்சம் :
பசுந்தீவனத்தை சிறந்ததொரு இறைச்சியாக மாற்றுவதில் முயலுக்கு நிகர் வேறெதும் இல்லை. முயல் இறைச்சி மருத்துவ குணங்கள் கொண்டது. கொலஸ்ட்ரால் மிக மிகக் குறைவு. இருதய நோயாளிகளும், முதியோர்களும் ஏற்கக் கூடிய இறைச்சி. முயல்களுக்கு தடுப்பூசிகள் ஏதும் தேவையில்லை. குறைந்த சினைக்காலம், அதிக குட்டிகள் ஈனும் திறன், துரித வளர்ச்சி அதிக தீவன மாற்றுத்திறன் ஆகிய குணங்கள் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள். நிச்சயம் லாபகரமான பண்ணைத் தொழில். ஆரம்பத்தில் சிறிய அளவில் பண்ணை அமைத்து, நல்ல அனுபவம் பெற்ற பின்னர் பெரிய அளவில் தொடங்கலாம். ஒரு நபர் 500 முயல்கள் வரைக்கும் பராமரிக்க முடியும். முன்னேற்றம் தரும் சிறந்ததொரு பண்ணைத் தொழில் முயல் வளர்ப்பு.




கிடைக்குமிடம் :
கொடைக்கானல் தாலுக்கா, மன்னவனூரில் இயங்கிவரும் மத்திய அரசுப் பண்ணையில் இனவிருத்திக்கான முயல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. முன்பதிவின் பேரில் பெற்றுக் கொள்ளலாம். இறைச்சியின முயல்கள் வெள்ளை ஜெயண்ட், சோவியத் சின்சில்லா மற்றும் உரோம இன முயல் அங்கோரா ஆகியன உள்ளன. முயல் வளர்ப்பதற்கான பயிற்சியும், தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டம், சாண்டிநல்லா என்ற இடத்தில் இயங்கிவரும் ஆட்டின இனவிருத்தி ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் கால்நடை ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும் கூட முயல்களை இன விருத்திக்காக வாங்கலாம்.
வங்கியில் கடன் உதவி :
அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் முயல் வளர்க்க கடன் உதவி பெறலாம். கடன் பெறுவதற்கு முன், வளர்ப்பதற்கான செலவுகள் மற்றும் நிகர லாபம் அடங்கிய திட்டத்தை சமர்ப்பித்து கடன் பெறலாம். ஆயுள் காப்பீடு வசதியும் முயல்களுக்கு உள்ளது.
விற்பனை வாய்ப்புகள் :
முயல்களை இனவிருத்திக்காக விற்பனை செய்யலாம். உபரியான முயல்களை இறைச்சிக்குப் பயன்படுத்தலாம். உயிர் எடையில் குறைந்தபட்சம் 50ரூ இறைச்சி கிடைக்கும். முயல் தோலை பதப்படுத்தி, கைவினைப் பொருட்கள் செய்யலாம். இதில் தொப்பி, மேலாடைகள், பர்ஸ், சாவிக் கொத்து, கவர் முக்கியமானவை. முயல் எரு சிறந்த எருவாக கருதப்படுகிறது. இதிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கலாம். சொந்த நிலம், தண்ணீர் வசதி, பசுந்தீவன வசதியுடைய விவசாயிகள், முயல் வளர்ப்பை ஆரம்பித்தால் நிச்சயம் கூடுதல் வருவாய் கிடைக்கும். நமது நாட்டின் இன்றைய இறைச்சித் தேவையை பூர்த்தி செய்யலாம்.
முயல் வளர்ப்பு ஆதாயம் :
இரண்டு ஆண் முயல்கள் மற்றும் பத்து பெண் முயல்களடங்கிய சிறிய முயல் பண்ணை அமைக்க ஆகும் செலவினங்கள் மற்றும் வருவாய் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அனுமானங்கள் :
· கூண்டுகளில் அடைக்கப்பட்ட முயல்கள் 500 எண்ணிக்கை வரையில் ஒரே நபர் அன்றாடம் பராமரிக்க முடியும் என்பதால் கூலிக்கு தனியாக ஆள் தேவையில்லை.
· ஒவ்வொரு பெண் முயலிடமிருந்து வருடத்திற்கு 30 குட்டிகள் பெறலாம்.
· இரண்டு ஆண் முயல்கள் மற்றும் பத்து பெண் முயல்களடங்கியது ஒரு குழுவாகும்.
· சராசரியாக பத்து பெண் முயல்களை இனச்சேர்க்கை செய்தால் எட்டு முயல்கள் ஒவ்வொரு முறையும் சினையாகும்.
· குட்டிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு 240 (8 முயல்கள் ஒ 30 குட்டிகள்)
· குட்டிகளில் இறப்பு விகிதம் 10ரூ (24 குட்டிகள்)
· முயல் தீவனத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.13.00
· குட்டிகளை விற்கும் வயது – 3 மாதங்கள்
· குருணைத் தீவனம் உட்கொள்ளும் அளவுகள் (கிலோ)
ஆண் முயல்கள் 2 x 100 கி x 365 நாட்கள் = 73
பெண் முயல்கள் 10 x 150 கி x 365 நாட்கள் = 548
குட்டி முயல்கள் 216 x 50 கி x 60 நாட்கள் = 648
மொத்தம் = 1269
1. நிரந்தர மூலதனம் (ரூபாயில்)
முயல் கொட்டகை அமைக்கச் செலவு
400
சதுர அடி. ஒவ்வொரு சதுர அடிக்கும் ரூ.25.00 வீதம் 10,000.00
முயல் கூண்டுகளின் விலை
10
தனிக் கூண்டுகள் (1.5 x 1.5 x 1.5′) ஒன்று ரூ.200 வீதம் 2,000.00
குட்டிகள் போடுவதற்கு
கூண்டுகள் (2 x 2.5 x 3.0′) 20 எண்ணிக்கை ஒன்று ரூ.400 வீதம் 8000.00
தீவன கலன்கள்
50
எண்ணிக்கை ஒன்று ரூ.5.00 வீதம் 250.00
தண்ணீர் தட்டுகள்
50
எண்ணிக்கை ஒன்று ரூ.5.00 வீதம் 250.00
இனவிருத்திக்கான 2 ஆண் = 10 பெண் முயல்களின் விலை ரூ.180 வீதம் 2160.00
இதர பொருட்கள் (தீ உமிழி, பக்கெட் முதலியன) 580.00
மொத்தம் 23,240.00
2. நிரந்தரச் செலவினங்கள்
முதலீட்டிற்கு வட்டி 12% ஆண்டிற்கு = 2760.00
கொட்டகை மற்றும் கூண்டுகள்
தேய்மானச் செலவு 12% ஆண்டிற்கு = 2460.00
மொத்தம் = 5220.00
3. நடைமுறைச் செலவுகள்
அடர் தீவனத்தின் விலை ரூ.13.00
1
கிலோ வீதம் 1270 கிலோவிற்கு = 16510.00
மருத்துவச் செலவு = 1000.00
இதரவ செலவுகள்
(
சுண்ணாம்பு, தேங்காய் நார் முதலியன)= 1490.00
மொத்தம் = 19000.00
4. மொத்த செலவினங்கள் (2+3) = 24220.00
வருவாய் விவரங்கள்
216 முயல் குட்டிகளை மூன்று மாத வயதில் ரூ.150 வீதம் விற்பதன் மூலம் 32,400.00
கழிக்கப்பட்ட முயல்களின் மூலம் 275.00
இறந்த குட்டிக்ளின் தோல் விலை ரூ.5 வீதம் 120.00
முயல் சாணத்தின் விலை 500.00
தீவனச் சாக்குகள் விலை 250.00
மொத்த வருவாய் 33,545.00
நிகர லாபம்
ஆண்டு மொத்த வருவாய் 33,545.00
மொத்த செலவினங்கள் (நிரந்தரச் செலவு + நடைமுறைச் செலவு) 24,220.00
நிகர லாபம் ஒரு ஆண்டிற்கு 9,325.00
குறிப்பு :ஒரு நபரின் முழு நேர வேலை வாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 20 ஆண் முயல்கள் +100 பெண் முயல்கள் வளர்க்கும் பொழுது ஒரு ஆண்டிற்கு நிகர லாபம் ரூ.93,250.00 கிடைக்கும்.



தொடர்பு கொள்ள :
தென் மண்டல ஆராய்ச்சி மையம்
மத்திய செம்மறியாடு உரோம ஆராய்ச்சி நிலையம்
(
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்)
மன்னவனூர்
கொடைக்கானல் – 624 103
திண்டுக்கல் மாவட்டம்
முயல் வளர்த்தால் முன்னேற்றம்

ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. இத்தொழிலின் முக்கியத்துவம் கருதி, கோவை கால்நடை பல்கலைக்கழகத்தில் முயல் வளர்ப்பு பற்றி பயிற்சி வழங்கப்படுகிறது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம் என்கிறார் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த செல்வம். டெய்லரான இவர், பகுதி நேரமாக வீட்டிலேயே முயல் வளர்க்க துவங்கினார். இப்போது ஏகப்பட்ட கிராக்கி. தொழிலை விரிவாக்க திட்டமிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
முயல் குட்டி ஒரு மாசம் வரை தாயுடன் இருக்கணும்.
அதுவரை தாய்ப்பால் குடிக்கணும். முதல்ல… 20 நாளில் குட்டியை பிரிச்சுட்டேன். 40 குட்டிகள் இறந்திடுச்சு. கோவை கால்நடை பல்கலை.யில் முயல் வளர்ப்பு பயிற்சி கத்து கொடுத்தாங்க. அவங்க சொன்னபடி முயல் வளர்க்க ஆரம்பிச்சேன். அப்புறம் ஒரு குட்டியைக் கூட நான் இழக்கல.
முயலையோ, முயல் கறியையோ முதலில் யாரும் வாங்கல. சமைக்கத் தெரியாது; ருசி பழக்கமில்லைனு சொன்னாங்க. நானே அதை சமைத்து அக்கம்பக்கத்தில் உள்ளவங்களுக்குக் கொடுத்தேன். அப்புறம் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்போ நல்ல கிராக்கி. ஒரு கிலோ ரூ.200க்கு விக்கறேன்.
முயல் இறைச்சி கடைக்காரர்கள் முயலை எடைபோட்டு உயிரோடு வாங்கிச் செல்கிறார்கள். அவர்கள் இறைச்சியை கிலோ ரூ.250க்கு மேல் விலை வைத்து விற்கிறார்கள்.
4 முயல் குட்டி மூலம் ஒரு ஆண்டில் 300 குட்டிகள் கிடைத்தது. இதன் மூலம் மாதம் சராசரியாக ரூ.4 ஆயிரம் வரை வருவாய். குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க வருவாயும் அதிகரிக்கும்.
இவ்வாறு செல்வம் கூறினார்.
ரூ.25 ஆயிரம் போதும்
ஒரு முயல் ரூ.500 வீதம், 2 ஆண், 10 பெண் முயல்கள். கூண்டு, உணவு தானியம் என மொத்த முதலீடு ரூ.25 ஆயிரம். வீட்டு முற்றம், மொட்டை மாடி, தோட்டம், காலியிடத்தில் வளர்க்கலாம். காற்றோட்டமான இடம் தேவை. கூண்டு முறையில் வளர்க்க 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. அகலத்துடன் கூண்டு இருக்க வேண்டும்.
கூண்டின் நீளம் தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம். கூண்டின் அடிப்பாகம் எலி, பாம்புகள் நுழையாதவாறு 90 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும்.
உற்பத்தி 5வது மாதம் முதல், பெண் முயல்கள் இனப்பெருக்கத்தை துவங்கும். ஒரு முயல் 3 ஆண்டு உயிர் வாழும். 6 மாதத்துக்கொரு முறை 6 முதல் 10 குட்டி போடும். 3 மாதத்தில் இருந்து இறைச்சிக்கு பயன்படுத்தலாம். ரோமம், தோலையும் விற்கலாம்.
வகைகள்
இமாலயன், சோவியத் சின்சில்லா, டச்சு, ஆல்பினோ வகை இனங்கள் 2 முதல் 3 கிலோ எடை வரை வளரும். இறைச்சிக்காக பயன்படுத்தலாம். நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, கலிபோர்னியா வகை 3 முதல் 4 கிலோ எடை வரை வளரும். முயல்களில் வெள்ளை ஜெயின்ட், சாம்பல் நிற ஜெயின்ட், பிளமிஸ் ஜெயின்ட் இனங்கள் 4 முதல் 6 கிலோ எடை வரை வளரும்.
ரோமம் விற்றால் காசு
சிறந்த ரக முடி 9 மாதத்தில் இருந்து கிடைக்கும். ஆண்டுக்கு பெண் முயல் 1 கிலோ முடியும், ஆண் முயல் 750 கிராம் முடியும் கொடுக்கும். முயல் தோலை பதனிட்டு நல்ல விலைக்கு விற்கலாம். முயல் தோலில் பர்ஸ், கையுறை, குல்லா, பொம்மை செய்யலாம்.
முயல் இறைச்சியை பிரியாணி, சில்லி, ரோஸ்ட், சூப், ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தலாம். சந்தை வாய்ப்பு ஒரு கிலோ முயல் கறி ரூ.200க்கு விற்கலாம். நடமாடும் ஊர்திகள், முயல்கறி ஸ்டால், மொத்தக் கொள்முதல் விற்பனை நிலையங்கள், விடுதிகள், ஓட்டல்களுக்கு சப்ளை செய்யலாம்.
கறியில் மருத்துவ குணம்
முயல் இறைச்சியில் அதிக எலும்புகள் இருக்காது. குறைந்த அளவு கொழுப்பு, அதிக புரதம், உயிர்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. முயல் இறைச்சி சாப்பிட்டால் குடல்புண், ஜீரண பிரச்னை வராது. வாதம் குறையும். உடல் பித்தம், காசநோய், இருமல், வாயு தொல்லை, மலச்சிக்கல் ஏற்படாது. இதய நோய் உள்ளவர்கள் கூட முயல் கறி சாப்பிடலாம். ஆடு, கோழி இறைச்சியைவிட இதில் கொழுப்பு குறைவு.
தினமும் 2 மணி நேரம் போதும்
முயலுக்கு பச்சை தாவரங்கள், காய்கள், பழங்கள், குதிரை மசால், வேலி மசால், முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், புற்கள், பலா இலை, முள் முருங்கை போன்றவற்றை கொடுக்கலாம். இளம் முயல்கள் வேகமாக வளர்ச்சி அடைய சத்து மிகுந்த கலப்பு தீவனம் அவசியம்.
கலப்பு தீவனத்தில் உடைத்த மக்காச்சோளம், உடைத்த கம்பு, கடலை புண்ணாக்கு, கோதுமை தவிடு, தாது உப்பு கலவை ஆகியவற்றை கலந்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முயலுக்கு 200 கிராம் முதல் 500 கிராம் வரை உணவு கொடுக்க வேண்டும். வீட்டில் வீணாகும் காய்கறிகளை கொடுக்கலாம்.
முயல் வளர்க்க தினமும் 2 மணி நேரம் செலவழித்தால் போதும். நல்ல லாபம் பார்க்கலாம். ரோமத்திற்காக வளர்க்கப்படும் அங்கோரா இனங்களை தனித்தனியாக கூண்டிலிட்டு வளர்க்க வேண்டும்.
கூண்டில் வைக்கோல் படுக்கை இட்டு வளர்ப்பதால் முயல்களுக்கு புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அதோடு 25 சதவீதம் அதிக ரோமம் கிடைக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை முடியை வெட்டி எடுக்கலாம்.
பெண் முயல் அமைதியில்லாமல், வாயை தரையிலோ அல்லது கூண்டிலோ அடிக்கடி தேய்த்தால் சினை அறிகுறியாகும். சினை அறிகுறி தெரிந்தவுடன் பெண் முயலை ஆண் முயல் இருக்கும் கூண்டுக்கு எடுத்து சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். கருவுற்ற நாளில் இருந்து 29 நாட்களுக்குள் பெண் முயல் குட்டிகளை ஈனும்.
வளர்ப்பு முயல்கள் எங்கு கிடைக்கும்?
முயல் பண்ணை அமைக்க விரும்புவோர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள முயல் பண்ணையில் மொத்தமாக முயல் வாங்கலாம். ஊட்டி சாந்தி நல்லாவில் உள்ள செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திலும் கிடைக்கும்.
முயல்களை 2 கிலோ உடல் எடை உள்ளபோது வாங்க வேண்டும். பெண் முயலுக்கு குறைந்த பட்சம் 8 பால் காம்புகள் இருக்க வேண்டும். பெண், ஆண் முயல்களை தனித்தனியே வெவ்வேறு பண்ணைகளில் இருந்து வாங்க வேண்டும். அல்லது முயல் வளர்ப்போரிடமும் பெற்றுக் கொள்ளலாம்.
பல்கலை.யில் பயிற்சி
கோவை சரவணம்பட்டி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத் தலைவர் சிவக்குமார் கூறியதாவது:
குறைந்த செலவு, இடம், முதலீடு, குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக முயல் வளர்ப்பு உள்ளது. சாதாரண தீவனத்தை தின்று சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு. முயலை இறைச்சிக்காகவும், தோல் மற்றும் ரோமத்திற்காகவும் வளர்க்கலாம். முயல் வளர்க்க கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையம் பயிற்சி அளித்து வருகிறது. கிராமத்தில் குறைந்தபட்சம் 10 பேருக்கு ஒரே நேரத்தில் பயிற்சி தேவைப்பட்டால் நேரிலேயே வந்து பயிற்சி அளிக்கிறோம். தகவல் அறிய விரும்புபவர்கள் அருகிலுள்ள கால்நடை பல்கலை பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
முயலை காதைப்பிடித்து தூக்கக்கூடாது. முதுகு பகுதியை பிடித்து தூக்க வேண்டும். வளர்ந்த முயல்களை முதுகு பகுதியை ஒரு கையாலும், அதன் வயிற்று பகுதியை ஒரு கையாலும் தாங்கிப் பிடித்து தூக்க வேண்டும்.
முயலுக்கு தோல் சிரங்கு, ரத்த கழிச்சல், சுவாச நோய், குடல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படும். அப்படி வந்தால் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக